h1

என் உயிர்த்தோழி

ஜூலை 30, 2008

என் உயிர்த் தோழியே

எங்கிருக்கிறாய் நீ

 

என் இத்துணை வருட வாழ்வில்

என் தோழியென

எனைக் கடந்து சென்றோர் பலர்

ஆனால் நீ மட்டும்

என்னுள் நீக்கமற நிறைந்து விட்டாய்.

 

என்னிடம் உன்

புகைப்படம் இல்லை ஆனால்

என் இதய சுவரெங்கும்

எண்ணெமென்னும் வண்ணத்தூரிகையால்

உன் முகம் தீட்டியுள்ளேன்.

 

எதிர்காலக் கனவுகள்

பளிச்சிட்ட கண்களில் இன்று

தாய்ப்பாசம் உரையுமோ?

 

இளமை ஊஞ்சலாடிய

தேகத்தில் காலதேவன்

தீட்டிய ஓவியம்

வரிகளென வெளிப்படுமோ?

 

நான் தனிமையில் சிந்தித்தால்

பசுமையான நினைவலைகள்

மனதைத் தழுவிச் செல்கின்றது

 

தமிழகத்தின் தலைநகரில்

திக்குத் தெரியாமல்

பேருந்தில் பயணித்த நாட்களும்

வேலை தேடித்திரிந்த நாட்களும்

வேலை கிடைக்காத பொழுது

தேடிய ஆறுதல்களும்

மிகவும் இனிமையான

நாட்கள் அவை.

 

என் இதயத்தின்

ரகசியங்கள் அறிந்தவள் நீ

உன் வாழ்வின் குறிக்கோள்

உணர்ந்தவன் நான்

 

வாழ்க்கை ஓட்டத்தில்

நாமிருவரும் விலகிச் சென்றுவிட்டாலும்

உன்னுடனான என் நட்பு

என்றும் மறையாது அதை

நீயும் அறிவாய்.

 

அலைபேசியும் மின்னஞ்சலும்

இன்று நம்மைப் பிணைக்கும்

புதிய நண்பர்கள் - அவையும்

சில நேரம் மறந்துவிடுகின்றன

ஆனால் நட்பு மறையாது மறக்காது.

h1

எனது கவிதை

ஜூலை 29, 2008

கவிதையை

கவிதையால் வடிக்க

எந்தக் கவியாலும்

இயலாது

நீ

கவிதை

நான்

கவிஞன்.

h1

குழந்தை

ஜூலை 16, 2008

ஆணும் பெண்ணும்

மகிழ்ச்சிக் கடலில்

மூழ்கி எடுத்த

விலை மதிப்பில்லா

முத்து

 

பத்து மாதம்

மணியறையில்

உறங்கி கிடந்த

ஒரு

சொர்க்கக் குவியல்

h1

என் மனைவி(காதலி)

ஜூலை 14, 2008

என் இனிய

காதல் தாமரையே

 

நீ…………

 

என் மனதினில்

விழுந்தாய் சித்திரையில்

 

என் நினைவினில்

வந்தாய் நித்திரையில்

 

என் இதயத்தினில்

உன்னாலான ஏக்கம்

 

ஆர்ப்பரிக்கும் கடல்போல்

அயராது தாக்கும்

 

குலமகளாய் நீ வந்தாய்

வைகாசித் திங்களன்று

 

வையகமே வாழ்த்தியது

நீ எனக்கு என்று

 

அன்று.

உலகத்தையே வென்றுவிட்ட

பூரிப்பு உன் உள்ளத்தில்

 

அன்று…

கனவுகள் நினைவாகிய

பேரானந்தம் என் உள்ளத்தில் 

.. உன் இதயமாகிய நான்

h1

இதயத்தின் குரல்

ஜூலை 14, 2008

என்னிடம்

“உனக்கு நான் யார்?”

என்று கேட்டாயே

 

கேள் இனியவளே……..

 

என்

இதயத்தின் துடிப்பாக நீ

காதலின் உருவாக நீ

பாசத்தின் பதிவாக நீ

கனவுகளின் ஊற்றாக நீ

உணர்வுகளின் உயிராக நீ

ஊக்கத்தின் உரமாக நீ

சாதனையின் கருவாக நீ

வெற்றியின் கனியாக நீ

முடிவினில் நீயே நானாக.

 

உன் நினைவாய் உன் இதயத்தின் குரல்.

h1

IT Fieldன் பாவப்பட்ட ஜென்மங்கள்

ஜூலை 11, 2008

எதோ ஒரு வேகத்துல நானும் ஒரு வலைதளம் ஆரம்பிச்சுட்டேன். இனிமேல் என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சப்ப, ஒரு ஆதங்கத்த பத்தின ஞாபகம் வந்தது. சரி அதைப்பத்தி பதிவு பண்ணலாம்னு முடிவு செஞ்சேன். என்னோட ஆதங்கம் IT fieldல வேலை பார்க்கும் நண்பர்களை பத்தினது. ஏன்னா நானும் அதில் ஒரு அங்கம்.

இப்போ நம்ம நாட்டுல Software Engineer அப்படின்னாலே ஏதோ கோடிகோடியா சம்பாதிக்கிறான் அப்படிங்கற நினைப்பு பரவலா இருக்கு. வீடு வாடகைக்கு பாக்கலாம்னு போனா 2500ரூ உள்ள வீட 4500ரூ சொல்றாங்க, ஆட்டோல ஏறலாம்னா 30ரூ கூட சொல்றாங்க, ஒரு பக்கம் என்னடான்னா விலையேற்றத்துக்கு மூலகாரணமே software engineers அப்படின்னு சொல்றாங்க. அப்படி என்னய்யா நாங்க பாவம் பண்ணிட்டோம், எல்லாத்தயும் தூக்கி எங்க தலையிலயே போடுறீங்க. நாங்க தலையவே அடமானம் வச்சுதானே சம்பாதிக்கிறோம், புரியலியா,. எங்ககிட்ட இருக்கிற 1400கிராம் மூளைய மூலதனமா வச்சுதான் சம்பாதிக்கிறோமின்னு சொல்லுறேன், அதுக்காக எங்களுக்கெல்லாம் மூளையில்லயா அப்படின்னு கோபப்படாதீங்க. மத்த fieldல use பண்ணுற அளவை விட கூடுதலா இங்க use பண்ண வேண்டியது வருது.

எப்படின்னு கேட்டா, projectல எல்லாம் சரியா இருக்குற வரை ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனா நமக்கு project தரான் பாருங்க clientனு ஒருத்தன் அவன் onsiteல இருந்து deadline நெருங்கிடுச்சு அப்படின்னு ஒரு alarm அடிச்சான்னா நம்மாளுங்களுக்கு இங்க ஆப்பு. 24×7 வேலை பாக்க சொல்லி நம்மள கொன்னுடுவான் நம்ம PL அப்படிங்கறவன். உடனே பிரச்சினை எப்போதுதானே வருது அப்படின்னு கேள்வி தோணுதில்ல? நிச்சியமா சொல்லுவேன் நாங்கெல்லாம் relaxஆ இருக்குறது அதிகபட்சம் ஒரு வருஷத்துல ஒரு மாசந்தான்.  எனக்கு தெரிஞ்சு 3 வருஷம் நைட் ஷிப்ட் மட்டுமே வேலை பாத்த ஆளெல்லாம் உண்டு. எங்களுக்கெல்லாம் வேலை பாக்க வரைமுறை கிடையாது.

அப்படி வேலை பாத்து வேலை பாத்து நம்மாளுங்களுக்கு BP, Sugar, Colestral மற்றும் பேரு தெரியாத வியாதிங்க வந்ததுதான் மிச்சம். இப்பொல்லாம் doctorகிட்ட போனீங்கன்னா கண்டிப்பா ரெண்டு software engineerராவது check-upக்கு வந்திருப்பான். இப்படியெல்லாம்தான் இப்போ சம்பாதிக்கிறோம், இப்போ software engineersக்கு 50 வயசுக்கு மேல வர வேண்டிய வியாதியெல்லாம் 25ல இருந்து 30க்குல்ல வந்திருது. 40 வயசுல retirement வாங்கியே ஆகணும்.

இதெல்லாம் நீங்க பரிதாபப்பட சொல்லல, இந்த மாதிரி கஷ்டப்படுறவன பாத்து தயவு செஞ்சு வயிதெரிச்சல் பட்டு பழி போடவேண்டாமின்னுதான் கேட்டுகிறேன். ஆனா ஒரு விஷயம், இன்னிக்கு software இல்லைனா பல பேரு வேலை கிடைக்காம பரதேசியா அலைவான். மேலும் பல விஷயங்களப் பத்தி சீக்கிரம் பேசுவேன்.

h1

முதல் பதிவு

ஜூலை 11, 2008

வணக்கம் நண்பர்களே!

வலைத்தளத்தில் இது எனது முதல் பதிவு.

என்னைப் பொறுத்த வரை மாதா, பிதா, குரு, தெய்வம் பிறகு நண்பன். 

நம் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு நண்பனாவது உண்டு. நாம் அனைவரும் அவர்கள் மூலமாக இந்த உலகில் நிறைய கற்றுக்கொள்கிறோம். அதில் நல்லவையும் உண்டு தீயவையும் உண்டு. எதனை follow பண்ணவேண்டும் என்பது நம்மைப் பொறுத்தது.

என்னடா இவன் முதல் பதிவிலேயே கொல்லுறானே அப்படின்னு நினனக்கவேண்டாம். எதனால் என்னோட முதல் பதிவுல நண்பனைப் பத்தி சொல்லறன்னா, இப்படி ஒரு வலைதளம் நானும் ஆரம்பிக்க Inspirationனே எனது நண்பன்தான். ஒரு ரெண்டு வருஷத்துல எனக்கு அறிமுகமாகி என்னோட ஒண்ணா ஓரே இடத்துல வேலை பாத்து (இப்பவும் என்னோட வேலை பார்க்கும்) எனக்கு பல நல்ல விஷயங்கள புரிய வச்ச, கத்து கொடுத்த என் ஆருயிர் நண்பனுக்கு மனமார்ந்த நன்றி. நன்றி மறப்பது நன்றன்று அப்படிங்கற கொள்கையுடையவன் நான்.  

 இந்த தளத்துல இனிமேல் எனக்கு பிடித்த, ஏன் நம்மில் பலருக்கும் பிடித்த பல நல்ல கருத்துக்களை பகிர்ந்துக்கலாம் என்று ஆசைப்படுகிறேன்.

என் எழுத்தில் பிழை இருந்தால் கற்றுக்கொடுங்கள். என்ன இருந்தாலும் இப்பொழுது பிறந்த குழந்தைதானே, அதற்கும் கற்றுக்கொள்ள ஆயிரமுண்டு. எனவே அந்த குழந்தையை பக்குவமாக கைபிடித்து வழி நடத்தி செல்ல வேண்டுகிறேன். 

 எனது ஆசையெல்லாம் கவிதையாகவும், கட்டுரையாகவும், கருத்துக்களாகவும் வெளிபடுத்தலாம் என்பது எண்ணம்.  ஆசையை மட்டுமல்ல ஆதங்கத்தையும்.

-புதிய நண்பர்களை நாடும் புது நண்பன்.